search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு மரியாதை"

    • முதலமைச்சர் அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
    • இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

    விக்கிரவாண்டி:

    உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த புகழேந்தி எம்.எல்.ஏ. உடல் தகனம் செய்யப்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நல குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் விழுப்புரம் அறிவாலயத்தில்பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணிக்கு அறிவாலயத்திற்கு வந்து புகழேந்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் திண்டிவனம் வழியாக புதுச்சேரி சென்றடைந்தார் . மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் புகழேந்தியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஏராளமான கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று காலை 6 மணிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம் அத்தியூர் திருவாதி வந்து புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். காலை 9 மணி அளவில் புகழேந்தியின் சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் அமைச்சர் பொன்முடி தலைமையில் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்று புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. புகழேந்தி எம்.எல்.ஏ. மறைவையொட்டி விக்கிரவாண்டி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பும், இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நகரச் செயலாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

    பின்னர் எம்.எல்.ஏ புகழந்தியின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

    இதில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, கவுதம சிகாமணி எம்.பி., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, கலைச்செல்வி துணை சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல்சலாம், துணை சேர்மன் பாலாஜி, குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி,ரவிதுரை, ஜெயபால், முருகன், நகர தலைவர் தண்டபாணி, துணை செயலாளர் சுரேஷ்குமார், பிரசாந்த், மாணவரணி யுவராஜ் , சிவா,இளைஞர் அணி கார்த்திக்,ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    • படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். (வயது 58) விவசாயி. இவர் கடந்த 12-ந்தேதி இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே வடபழனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வக்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுபற்றி மருத்துவமனை டாக்டர்கள் செல்வக்குமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து வேறு சிலரது உயிர்களை காப்பாற்ற உதவ வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    பின்னர் அரசு உடல் உறுப்பு தானம் திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ஈரோடு தனியார் மருத்துவமனையில் செல்வக்குமார் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவை அகற்றப்பட்டு கோவை மருத்துவமனைக்கு தானமாக அனுப்பப்பட்டது.மேலும் காங்கயம் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் செல்வக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. செல்வகுமாருக்கு ஜானகி என்ற மனைவியும், சதீஷ்குமார் என்ற மகனும், கல்பனாதேவி என்ற மகளும் உள்ளனர்.

    • மூளை சாவடைந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இறந்து போன தினேஷ்குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவருடைய உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி காமராஜ் பேட்டையை சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி சவுண்டப்பன் (55). இவரது மனைவி ருக்மணி (52).

    இவர்களுக்கு பிரியா (26), என்ற மகளும், தினேஷ் குமார் (24), கார்த்தி (22) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் தினேஷ்குமார் டிப்ளமோ கெமிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் பார்மசி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி தினேஷ்குமார் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தினேஷ்குமார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதில் மூளை சாவடைந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இறந்து போன தினேஷ்குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவருடைய உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டது. இதையடுத்து தினேஷ்குமார் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மேச்சேரி நெசவாளர் காலனியில் உள்ள அவரது இல்லத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் பொன்மணி, தாசில்தார் சுமதி, மேட்டூர் அரசு மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி, டி.எஸ்.பி. மரியமுத்து ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகில் உள்ள மயானத்திற்கு தினேஷ்குமார் உடல் எடுத்துச்செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யபட்டது.

    • 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராகவேந்திரா மூளைச்சாவு அடைந்தார்.
    • சிறுவன் ராகவேந்திராவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கலைச் சேர்ந்தவர் அருள். இவரது மனைவி பரிமளா. இத்தம்பதியின் மகனான ராகவேந்திரா 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 18-ந்தேதி இரவு நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் ஆற்காடு-ஆரணி சாலையில் ராகவேந்திரா சென்றார். அப்போது, எதிரே வந்த நபர்கள் மீது சிறுவன் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ராகவேந்திராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராகவேந்திரா மூளைச்சாவு அடைந்தார்.

    மகன் இறந்துவிட்ட துக்கம் தாங்காமல் பெற்றோர் உடைந்து போக… அவர்களை அழைத்து உடலுறுப்பு தானம் குறித்தும், சிறுவனின் உறுப்புகள் மூலம் பலர் புதுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்கினர். இதற்கு சிறுவனின் பெற்றோர் சம்மதிக்க, மின்னல் வேகத்தில் மருத்துவர்கள் உடல் உறுப்புகளை அகற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சி.எம்.சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் அப்போலோ மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.

    இதையடுத்து, சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் ராகவேந்திராவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் சென்றனர். அப்போது மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது சிறுவனின் பெற்றோர், தங்களுக்கு உடல் உறுப்பு தானம் பற்றி எதுவும் தெரியாது, மருத்துவர்கள் சொன்னதால் விழிப்புணர்வு பெற்றதாக அழுதபடி அமைச்சரிடம் கூறினர். இதனால், உருக்கமாக இருகரம் கூப்பி வணங்கிய அமைச்சர், கண்ணீர் சிந்தியபடி, அவர்களின் காலில் விழவும் முயன்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


    • உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
    • சாலை விபத்தில் உயிரிழந்தார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள புதூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் இளங்கோ (29). இவர் கடந்த 6 ஆண்டுகளாக காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ்கரராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 20-ந் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்ற இளங்கோ பணி முடிந்தவுடன் நள்ளிரவு பைக்கில் வீடு திரும்பினார்.

    அப்போது பனப்பாக்கம் பெருவளையம் சாலையில் விரிவாக்க பணி நடைபெறும் இடத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து, போலீஸ்காரர் இளங்கோ வின் இறுதிச்ச டங்கு அவரது சொந்த ஊரான பாணாவரம் அடுத்த புதூரில் நேற்று நடந்தது.

    இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சற்குணன் தலைமையிலான போலீசார் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இளங்கோவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இதில் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் முன்னதாக காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர், இளங்கோவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து 2,890 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்.
    • இறந்த பிறகு பயனற்று போகும் உறுப்புகளை பலருக்கு வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்டவர் மறைவுக்கு பிறகும் பலரை வாழ வைக்கிறார்.

    சென்னை:

    விழுப்புரம் அருகே உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்த 26 வயது வாலிபர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர்.

    உறுப்புகளை தானமாக பெற்ற பிறகு அவரது உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோர் அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    இறந்து போன வாலிபரின் தந்தை ஓய்வுபெற்ற அரசு ஊழியர். தாயார் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார்.

    இவர்கள் இறந்து போன மகனின் உடல் உறுப்புகளை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தானமாக வழங்கி இருக்கிறார்கள். இதயம், கல்லீரல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும், சிறுநீரகம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கும், கண்விழி திரைகள் எழும்பூர் கண் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கைந்து பேர் மறுவாழ்வு பெற்றுள்ளார்கள்.

    உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து 55 நாட்கள் ஆகிறது. இந்த குறுகிய கால கட்டத்தில் 26 பேர் உடல் உறுப்பு தானம் செய்து இருக்கிறார்கள். அதே போல் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து 2,890 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்.

    தற்போது 7007 பேர் உறுப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் 8 பேருக்கு இதயம், 68 பேருக்கு நுரையீரல், 25 பேருக்கு இவை இரண்டும் தேவைப்படுகிறது. 6,729 பேருக்கு சிறுநீரகம் தேவைப்படுகிறது. 42 பேருக்கு சிறுநீரகம், கல்லீரல் இரண்டும் தேவைப்படுகிறது. இதயமும், கல்லீரலும் ஒருவருக்கு தேவைப்படுகிறது.

    இறந்த பிறகு அரசு மரியாதை என்ற அங்கீகாரம் வழங்கப்படுவதால் பலர் மனமுவந்து உறுப்புகளை தானம் செய்து வருகிறார்கள். இறந்த பிறகு பயனற்று போகும் உறுப்புகளை பலருக்கு வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்டவர் மறைவுக்கு பிறகும் பலரை வாழ வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம் பானாமூப்பன்பட்டிக்கு பைக்கில் சென்றார்.
    • மூளைச்சாவு அடைந்த வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.

    நிலக்கோட்டை:

    தமிழகத்தில் முதல்முறையாக உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குன்னூத்துபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது56). விவசாயி. இவர் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம் பானாமூப்பன்பட்டிக்கு பைக்கில் சென்றார்.

    மீண்டும் ஊர் திரும்பியபோது எஸ்.மேட்டுப்பட்டி பகுதியில் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மூளைச்சாவு அடைந்த வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதற்காக அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் பூங்கொடி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

    • கிருஷ்ணகுமார் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
    • கிருஷ்ணகுமார் உடலில் இருந்த 2 சிறுநீரகம், கல்லீரல், கணையம் என 4 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உடனடியாக அது மற்ற 4 பேருக்கு பொருத்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கஞ்சமநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். 34 வயதாகும் இவர் விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த 17-ந் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது இருசக்கர வாகனத்தின் டயர் வெடித்து அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி கிருஷ்ணகுமார் காயம் அடைந்தார். தலையில் படுகாயம் அடைந்த கிருஷ்ணகுமார் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.

    அங்கு அவருக்கு தலையில் அதிக அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்த நிலையில் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் சுயநினைவு திரும்பாத நிலையில் இவர் மூளை சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இதனால் கிருஷ்ணகுமார் புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் டாக்டர்கள் இவர் மூளை சாவு அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.

    இதனால் கிருஷ்ண குமார் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை அறிந்த கிருஷ்ண குமார் குடும்பத்தினர் நேற்று உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்தனர். இதனையடுத்து கிருஷ்ணகுமார் உடலில் இருந்த 2 சிறுநீரகம், கல்லீரல், கணையம் என 4 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உடனடியாக அது மற்ற 4 பேருக்கு பொருத்தப்பட்டது. இதனையடுத்து கிருஷ்ண குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கஞ்சமநாதன் பேட்டை கிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு சமீபத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட பிறகு கடலூர் மாவட்டத்தில் உடல் உறுப்பை தானம் செய்த முதல் நபராக இவர் உள்ளார். இவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதையுடன் கிருஷ்ண குமார் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. சிறிய கிராமத்தில் இருக்கும் விவசாயி அளவிற்கு உடல் உடல் உறுப்பு தானம் செய்வது சென்றடைந்து இருப்பதால் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உடல் உறுப்பு தானம் செய்த கிருஷ்ண குமாருக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ள நிலையில் அவரது குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

    • கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர் முன் வந்தனர்.
    • அரசின் சார்பாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கோத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது40) என்பவர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

    இதனால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளை செயல் இழந்தது தெரிய வந்தது.

    பின்னர் உறுதி செய்து கொண்ட மருத்துவ குழுவினர் அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர் முன் வந்தனர்.

    இதனை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவி னர், உடல் உறுப்புக்கள் தானமாக பெற்றனர். முதலில் தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் முதலில் இருதயம் பிரத்தேயகமாக தயார் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் காவல் துறை பாதுகாப்புடன் சென்னையில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அவரது உடலில் இருந்து 2 சிறுநீரகங்களில், ஒன்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் கோவை மருத்துவமனைக்கும், கல்லீரல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

    மேலும் 2 கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கண் பார்வை வேண்டி பதிவு செய்தவர்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்தவுடன் கோவிந்தராஜன் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது பிரேத பரிசோதனை கூடம் அருகே மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், உடலுக்கு மலர் மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதனை அடுத்து பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து அமரர் ஊர்திக்கு எடுத்துச் செல்கின்ற வரை, சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இருபுறமும், அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அதேப்போல் பயின்று வருகின்ற மருத்துவ, செவிலியர் மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று, இறந்தாலும், சில உயிர்களை வாழ வைக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த கோவிந்தராஜனின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செய்து, வழி அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதயம் அறுவை சிகிச்சை செய்துவுடன், போதிய பாதுகாப்பு வசதிகள், ஏற்படுத்தப்பட்டு, காவல் துறையினர் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சென்னைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டது.

    தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வெளியிட்ட அறிவிப்புகள் இனி வரும் காலங்களில் பல உயிர்களை காப்பாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடல் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கோவிந்தராஜின் உடல் அவரது சொந்த ஊரான போச்சம்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கு உடல் உறுப்பு தானம் செய்த கோவிந்தராஜூக்கு அரசின் சார்பாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

    • வடிவேல் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூளைச்சாவு அடைந்த வடிவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 44). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளராகவும் உள்ளார். இவரது மனைவி பட்டு லெட்சுமி (38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வடிவேல் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 23-ந் தேதி வடிவேல் அலுவலக பணிகளை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

    சீலையம்பட்டி அருகே வந்தபோது சாலையின் குறுக்கே வந்த மாடு அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தவறி கீழே விழுந்த வடிவேல் தலை, காது, மூக்கு பகுதியில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வடிவேலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி மதுரையில் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரில் வடிவேல் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த வடிவேலின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேனி மாவட்டத்துக்கு வருகை தந்தார். அவர் மூளைச்சாவு அடைந்த வடிவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்குப் பின் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த நபரின் உடல் முதன் முறையாக அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவது சின்னமனூரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கோவை விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • காலை 9 மணிக்கு கோவை ராணுவ பிரதேசப்படை மூலம் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவியிடம் தேசியக்கொடி ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை தேவி நகரை சேர்ந்தவர் மைக்கேல்சாமி (48). ராணுவ வீரர்.

    இவர் புனேயில் உள்ள ராணுவ மையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள கூர்க்கா படை பிரிவுக்கு பணியிட மாறுதல் செய்யப்படடார்.

    இதையடுத்து 20 நாள் விடுமுறையில் காரமடையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டு கடந்த 4-ந் தேதி சிக்கிம் புறப்பட்டு சென்றார்.

    அங்கு பங்கர் பகுதியிலுள்ள இந்தியா-சீனா ராணுவ எல்லை பகுதியில் 17,000 மலை உச்சியில் பனிப்பொழிவு நிறைந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அங்கு நிலவிய கடும் குளிரான காலநிலையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவை விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவரது உடல் காரமடையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு கோவை ராணுவ பிரதேசப்படை மூலம் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவியிடம் தேசியக்கொடி ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தொடர்ந்து அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவை-ஊட்டி சாலையில் உள்ள ஆர்.சி.கல்லறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இதில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கூர்க்கா ரெஜிமென்ட் முன்னாள் கமென்டிங் அதிகாரி கர்ணல் லலித்ஜெயின், கோவை வடக்கு கோட்டாட்சியர் ரூபா, தாசில்தார் மாலதி மற்றும் அரசு அதிகாரிகள், உறவினர்கள் மலர் வளையம் வைத்து ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தினர்.

    கோவை ராணுவ பிரதேச படை லெப்டனென்ட் ஜென்ரல் சாந்தனு தலைமையில் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு அனிதா ஜோசி(58) என்ற மனைவியும், மோனிகா என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×